Tuesday, January 3, 2023

Shrimad Bhagavad Gita Juice

ஸ்ரீமத்பகவத்கீதா சாறு

ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா பத்தாவது அத்யாயத்தில் இருபதாவது ஸ்லோகம் முதல் எவர்களில் யாராக மற்றும் எவையெவற்றுள் எதுவாகத் தான் இருக்கிறேன் என்பதை அர்ஜுனனுக்கு உரைக்கிறார். 

அதில் எடுத்த எடுப்பிலேயே மிக மிக சுருக்கமாக இவ்வாறு கூறுகிறார் :

"நான் எல்லா உயிரினங்களின் உள்ளத்திலும் ஆத்மாவாக இருக்கிறேன். 

மேலும், உயிரினங்களுக்கெல்லாம் ஆதியாகவும், நடுவாகவும், முடிவாகவும் நானே இருக்கிறேன்." 

முதல் வாக்யத்தின் மூலம் நாம் உணர வேண்டியது என்னவென்றால், என்னைக் காண விரும்பி, என்னை வெளியே தேடி அலைந்து உனது பொன்னான நேரத்தை வீணடிக்காதே! நான் உன்னுள்ளேயே இருக்கிறேன். அதை நீ புரிந்து கொள்வாயாக! என்று கூறுகிறார். 
இதை உணர்ந்தவர்களே "அஹம் ப்ரஹ்மாஸ்மி" என்று கூறுகின்றனர்.

இரண்டாவது வாக்யத்தின் மூலம் நாம் உணர வேண்டியது என்னவென்றால், முதலில் தோன்றிய உயிர்கள் யாவும் அதே வடிவத்தில் மற்றும் தன்மையில் இருப்பதில்லை. காலம் செல்லச் செல்ல அவை பரிணாம வளர்ச்சி அடைந்து வடிவமும் தன்மையும் மாற்றம் அடைகின்றன. ஒரு காலகட்டத்தில் அதற்கும் ஒரு முடிவு வரும்.  இவையனைத்தும் அந்த பரமாத்மாவின் செயல்தான் என்றும், உயிரினங்கள் அனைத்தும் அவருடைய செயல்கள் நிறைவேறத் தேவையான கருவிகள் என்பதே! 

#சாறு_மேலும்_ஊறி_வழியும்!

#ஸ்ரீமத்_பகவத்கீதா_சாறு_2

ஸ்லோகம் 21-1
आदित्यानामहं विष्णुः
ஆதி3த்யாநாமஹம் விஷ்ணு:

ஆதித்யாநாம் - அதிதியின் புதல்வர்களான பன்னிருவருள் 
அஹம் - நான் 
விஷ்ணு: - விஷ்ணுவாக 
அஸ்மி - இருக்கிறேன். 
(மேலே உள்ள வாக்யத்தில் அஸ்மி என்ற சொல் மறைபொருளாக உள்ளது.) 

அதிதியின் பன்னிரு புதல்வர்கள்
1) தாதா 2) மித்ரன் 3) அர்யமா 4) ஶக்ரன் 
5) வருணன் 6) அம்ஶன் 7) பகன் 
8) விவஸ்வான் 9) பூஷா 10) ஸவிதா 
11) த்வஷ்டா மற்றும் 12) விஷ்ணு. 
இவர்கள் ஆதித்யர் எனப்படுவர். இவர்களில் விஷ்ணு என்பவர் இவர்களுக்கு அரசர்; எல்லோரிலும் மிகவும் சிறந்தவர். 

ஆகையால் ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா அந்த விஷ்ணுவை என் ஸ்வரூபம் என்றுரைக்கிறார். 

#சாறு_மேலும்_ஊறி_வழியும்!

#ஸ்ரீமத்_பகவத்கீதா_சாறு_3

ஶ்லோகம் 21-2

ज्योतिषां रविरंशुनान्

ஜ்யோதிஷாம் ரவிரம்ஶுமாந்  

ஜ்யோதிஷாம் - ஒளிர்பவற்றுள் 
அம்ஶுமாந் - கிரணங்களோடு கூடிய 
ரவி - ஸூர்யன் 
அஸ்மி - இருக்கிறேன் (இச் சொல் இங்கே மறைபொருளாக உள்ளது.) 

அதாவது, ஒளிர்பவற்றுள் கிரணங்களோடு கூடிய ஸூர்யனாக இருக்கிறேன். 

இவ்வாறு ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா சொல்லக் காரணம்? 

நாம் வட்டார வழக்காக ஒரு வாக்யத்தைக் கேட்டிருப்போம் :

"மின்னுவதெல்லாம் பொன்னல்ல" என்று. ஒளிர்கின்ற அனைத்துமே நிரந்தரமாக ஒளிர்பவை அல்ல. எங்கும் நீக்கமற நிறைபவை அல்ல. குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் அவற்றின் ஒளி பயணிப்பதுமில்லை. ஆனால், இவற்றுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட, என்றும் ஒளிர்கின்ற, எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கும் ஒளிபொருந்திய ஒன்றே ஒன்று ஸூர்யன். தன்னுடைய இத்தன்மையால் உயிர்களனைத்திற்கும் வாழ்வாதார ஶக்தியாக விளங்குகிறான்.
அதாவது, ஒளிர்பவற்றுள் உயரிய சிறப்பு வாய்ந்தவன். 

பரமாத்மாவின் தன்மையும் இத்தகையதே! ஆதியந்தமற்ற, நிரந்தரமாக ஒளிபொருந்திய, அனைத்துயிர்களுக்கும் வாழ்வாதார ஶக்தியாக அவர் விளங்குகிறார். 
அவர் அனைத்திலும் உயரிய சிறப்பு வாய்ந்தவர்; சிறப்பானவற்றுள் உயரிய சிறப்பு வாய்ந்தவர். 

இதனால்தான் ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா அர்ஜுனனிடம் "ஒளிர்பவற்றுள் கிரணங்களோடு கூடிய ஸூர்யனாக இருக்கிறேன்" என்று கூறினார்.

#சாறு_மேலும்_ஊறி_வழியும்!

#ஸ்ரீமத்_பகவத்கீதா_சாறு_4

ஶ்லோகம் 21-3

मरीचिर्मरुतामस्मि 

மரீசிர்மருதாமஸ்மி 

மருதாம் - (நாற்பத்தொன்பது) வாயு தேவர்களுள் 
மரீசி - தேஜஸ் ஆக 
அஸ்மி - இருக்கிறேன் 

மருத்துகள் - தக்ஷரின் பெண் மருத்வதி. 
இவளுக்கு 49 புதல்வர்கள். இவர்கள் மருத்கணம் என்றும், மருத்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்களுள் "மரீசி" என்ற பெயரில் ஒரு புதல்வனும் இல்லை. 

ஆயின், இப்பெயர் எப்படி வந்தது? அப்பெயரின் பொருளென்ன? 

இங்கே மரீசி என்ற சொல்லுக்கு "மருத்" என்று பொருள் கொள்ளாமல், அனைத்து மருத்களின் தேஜஸ் அல்லது ஒளி என்று பொருள். 

இங்கே "மருத்" என்று பெயர் வந்ததற்கு இன்னொரு கதையும் சொல்லப் படுகிறது. 

அதாவது, கஶ்யப முனிவரின் மனைவி திதி. அவளுடைய பல புதல்வர்கள் பிறந்து பிறந்து இறந்து விடவே, அவள் தனது கணவரை அண்டி சிறப்பாகப் பணிவிடை செய்ய, அதனால் மகிழ்ந்தவர் விரும்பும் வரத்தையளிப்பதாகக் கூற, அவளும் இந்த்ரனை மாய்க்கக் கூடிய, மிகவும் தேஜஸ் உள்ள ஒரு புத்ரன் வேண்டுமெனக் கேட்டாள்.

அவ்வரத்தை ஒரு சில நிபந்தனைகளுடன் கஶ்யபர் அளித்தார். 
அந்நிபந்தனைகள் என்னவென்றால், "திதி தினமும் பகவானை த்யானம் செய்ய வேண்டும். மிகவும் கட்டுப்பாட்டுடனும், தூய்மையுடனும் நூறு ஆண்டுகள் தனது கர்ப்பத்தைக் காப்பாற்ற வேண்டும். அப்படி காப்பாற்றினால், அவளது கருவிலிருந்து இந்த்ரனை மாய்க்கும் புதல்வன் பிறப்பான்" என்பதாகும். 

இது இந்த்ரனுக்குத் தெரிந்து விட, அவன் மிகுந்த விநயத்துடன் பணிவிடை செய்து வந்தான். அவளது தூய்மை எப்போது கெடும், அப்போதுதான் ஏதாவது செய்ய முடியும் என்று காத்திருந்தான். நூறு ஆண்டுகள் முடிய சில நாட்களுக்கு முன்பு ஒரு நாள் திதி கால்களை கழுவிக் கொள்ளாமல் விரிப்பில் படுத்துக் கொண்டாள். படுத்தவுடன் தூங்கி விட்டாள். 

இதுதான் சரியான சமயமென இந்த்ரன் கையில் வஜ்ராயுதத்துடன் கர்ப்பத்தில் நுழைந்து, கருவை ஏழு துண்டங்களாக வெட்டினான். ஆயினும் அவை அழியாததால் கோபம் கொண்டு அவை அனைத்தையும் மீண்டும் ஏழு துண்டுகளாக வெட்டினான். அப்படியும் அவை அழியவில்லை. அவை அழியாதெனக் கண்டான். அவை அனைத்தும் மிகவும் வேகமுள்ள மருத்துகள் என்ற தேவதைகள் ஆயின. 
திதியானவள் பகவத் த்யானத்திலிருந்தபோது அந்த தேஜஸினால் உண்டானவர்கள் என்பதால்தான் அவை கர்பத்தில் அழியவில்லை. 

இந்த 49 மருத்களின் பெயர்களை கீழே காண்க (நாம் நம்முடைய வாழ்க்கையில் ஒரே ஒரு முறையாவது படிக்க வேண்டும் என்பதற்காகவாவது பெயர்களை பொறுமையாகப் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்) :

1) ஸத்வஜ்யோதி 2) ஆதித்யன் 
3) ஸத்யஜ்யோதி 4) திர்யக்ஜ்யோதி 
5) ஸஜ்யோதி 6) ஜ்யோதிஷ்மான் 
7) ஹரிதன் 8) ருதஜித் 9) ஸத்யஜித் 
10) ஸுஷேணன் 11) ஸேனஜித் 
12) ஸத்யமித்ரன் 13) அபிமித்ரன் 
14) ஹரிமித்ரன் 15) க்ருதன் 16) ஸத்யன் 
17) த்ருவன் 18) தர்த்தா 19) விதர்த்தா 
20) விதாரயன் 21) த்வாந்தன் 
22) துனி 23) உக்ரன் 24) பீமன் 25) அபியு 
26) ஸாக்ஷிபன் 27) ஈதருக் 
28) அந்யாத்ருக் 29) யாத்ருக் 
30) ப்ரதிக்ருதன் 31) ருக் 32) ஸமிதி
33) ஸம்ரம்பன் 34) ஈத்ருக்ஷன் 
35) புருஷன் 36) அந்யாத்ருஷன் 
37) சேதஸன் 38) ஸமிதன் 
39) ஸமித்ருக்ஷன் 40) ப்ரதித்ருக்ஷன் 
41) மருதி 42) ஸரதன் 43) தேவன் 
44) திசன் 45) யஜுஸ் 46) அநுத்ருக் 
47) ஸாமன் 48) மாநுஷன் 49) விசன் 

#சாறு_மேலும்_ஊறி_வழியும்!

#ஸ்ரீமத்_பகவத்கீதா_சாறு_5

 ஶ்லோகம் 21-4

नक्षत्राणामहं शशी 
நக்ஷத்ராணாமஹம் ஶஶீ

நக்ஷத்ராணாம் - நக்ஷத்ரங்களுள் 
அஹம் - நான் 
ஶஶீ - சந்த்ரனாக 
அஸ்மி - இருக்கிறேன் (இச்சொல் இங்கே மறைபொருளாக உள்ளது)

அஶ்வினி, பரணி, க்ருத்திகை உள்ளிட்ட இருபத்தேழு நட்சத்திரங்களுக்கும், நட்சத்திர மண்டலத்திற்கும் அரசன் சந்த்ரன். அவையனைத்திலும் சிறப்பானவன். 

ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா அனைத்து சிறப்பானவற்றுள் சிறந்தவர் என்பதால், "நக்ஷத்ரங்களுள் நான் சந்த்ரனாக இருக்கிறேன்" என்று அர்ஜுனனுக்கு உரைக்கிறார். 

#சாறு_மேலும்_ஊறி_வழியும்!

#ஸ்ரீமத்_பகவத்கீதா_சாறு_6

ஶ்லோகம் 22-1

वेदानां सामवेदोऽस्मि 
வேதாநாம் ஸாமவேதோऽஸ்மி

வேதாநாம் - வேதங்களுள் 
ஸாமவேத: - ஸாமவேதமாக 
அஸ்மி - இருக்கிறேன் 

ருக், யஜுர், ஸாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்களுள் ஸாமவேதம் என்பது ஓதுவதற்கும், கேட்பதற்கும் மிகவும் இனிமையாக, ஸங்கீதம் போன்று இருக்கும். 

மேலும் அதிலுள்ள பரமேஸ்வரனைப் பற்றிய துதிகள் மிகவும் அழகானவை. 
இக்காரணங்களால் வேதங்களுள் ஸாமவேதத்திற்கு தனி முக்யத்வம் உண்டு; சிறப்பு உண்டு. 

எனவே ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா வேதங்களுள் ஸாமவேதமாக இருக்கிறேன் என்று அர்ஜுனனுக்கு உரைக்கிறார். 

ஶ்லோகம் 22-2

वेवानामस्मि वासवः 
தேவாநாமஸ்மி வாஸவ:

தேவாநாம் - தேவர்களுள் 
வாஸவ: - இந்த்ரனாக 
அஸ்மி - இருக்கிறேன் 

ஸூர்யன், சந்த்ரன், அக்நி, வாயு, வருணன் உள்ளிட்ட தேவர்களுள் சிறப்பானவன் இந்த்ரன். அதனால் அவன் அனைத்து தேவர்களுக்கும் அரசனாக இருக்கிறான். 

சிறப்பானவர்களுள் சிறப்பு வாய்ந்தவர் ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா என்பதால், தேவர்களுள் இந்த்ரனாக இருக்கிறேன் என்று அர்ஜுனனுக்கு உரைக்கிறார். 

#சாறு_மேலும்_ஊறி_வழியும்!

#ஸ்ரீமத்_பகவத்கீதா_சாறு_7

 ஶ்லோகம் 22-3

इन्द्रियाणां मनश्चास्मि 
இந்த்ரியாணாம் மநஶ்சாஸ்மி 

இந்த்ரியாணாம் - பொறி புலன்களுள் 
மந: - மனதாக 
அஸ்மி - இருக்கிறேன் 

நமது உடலில் மொத்தம் பதினொரு புலன்கள் உள்ளன. அவையாவன :

கண், காது, தோல், நாக்கு, மூக்கு, வாக்கு, கை, கால், ஆண்-பெண் குறி, ப்ருஷ்டம் மற்றும் மனம். 

இவற்றுள் மனம் ஏனைய பத்து புலன்களை ஆள்கிறது. அவற்றைத் தூண்டுகிறது; (இவ்வாறு ஆள்கிறது, தூண்டுகிறது என்பதை சிந்தித்துப் பார்த்தால் உணர முடியும்.) மிகவும் நுண்ணியது மற்றும் உயர்ந்தது. ஆகவே இந்த மனம் என்ற புலன் முக்யமானது.

எவ்வாறு மனமானது பிற புலன்களை ஆண்டு, அவையவை அவற்றுக்குண்டான இயல்பில் செயல்படத் தூண்டுகிறதோ, ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவும் நம்மையும், பிற உயிரினங்களையும் ஆண்டு, அவர்தம் மற்றும் அவற்றின் இயல்பில் செயல்படத் தூண்டுகிறார். 

ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா எவற்றுள் எது சிறந்ததோ, அதைத் தனது ஸ்வரூபம் என்று கூறியுள்ளார் அல்லவா? 

அதன்படி, புலன்களுள் மனம் என்ற புலனாக இருக்கிறேன் என்று அர்ஜுனனுக்கு உரைக்கிறார்.

#சாறு_மேலும்_ஊறி_வழியும்!

#ஸ்ரீமத்_பகவத்கீதா_சாறு_8

 ஶ்லோகம் 22-4

भूतानामस्मि चेतना 
பூதாநாமஸ்மி சேதநா 

பூதாநாம் - உயிரினங்களுள்
சேதநா - உணர்வாக 
அஸ்மி - இருக்கிறேன் 

உயிரினங்களுள் உணர்வாக இருக்கிறேன்.

எல்லா ப்ராணிகளுக்கும் அறியும் திறன் உண்டு. அதன் மூலம் அவை ஸுகதுக்கங்கள் ஆகிய உணர்வுகளைப் பெறுகின்றன. இந்த உணர்வுகளென்பது உள்ளத்திற்கென அமைந்த சிறப்பான செயல்திறன் ஆகும். இவற்றை பகவான் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதிமூன்றாவது அத்யாயத்தின் ஆறாவது ஶ்லோகத்தில் குறிப்பிடும்போது, "க்ஷேத்திரத்தின் (உடலின்) விகாரம்" - அதாவது, உடலின் மாறுதலடைந்த வடிவம் என்று குறிப்பிடுகிறார். 

அது என்ன மாறுதலடைந்த வடிவம்? 
1) எப்பொருள்களை ஸுகத்திற்குக் காரணம் என்றும், துயரத்தைப் போக்குவன என்றும் மனிதன் கருதுகிறானோ, அவற்றை அடைவதற்கு ஏற்படும் பற்றோடு கூடிய விருப்பம் 'இச்சை' எனப்படும்.

இதில் வாஸனை, பேராசை, எதிர்பார்ப்பு, பேராவல், விருப்பம் முதலிய பல வகைகள் உண்டு. இது மனதின் விகாரம் - அதாவது மாறுதலடைந்த வடிவம்.

2) வேண்டாதது வந்து சேர்ந்தாலும், வேண்டியது விலகினாலும் ஏற்படும் மனவேதனைதான் 'துக்கம்' இதுவும் மனதின் விகாரம் - அதாவது மாறுதலடைந்த வடிவம். 

3) ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்ட இந்த உடலானது இறந்த பிறகு - அதாவது ஸுக்ஷ்ம ஸரீரம் பிரிந்த பிறகு எல்லோர் எதிரிலும் கிடப்பது இந்த ஸ்தூல ஸரீரம். இதுவும் பூதங்களின் மாறுதலடைந்த வடிவம். 

அந்த ஞான  ஶக்திதான் உணர்வு (சேதநா) ஆகும். எல்லா ப்ராணிகளின் அனுபவத்திற்கும் உணர்வு என்பது ஒரு முக்கியமான ஶக்தி. எனவே ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா அதைத் தனது ஸ்வரூபம் என்று அர்ஜுனனுக்கு உரைக்கிறார்.

#சாறு_மேலும்_ஊறி_வழியும்!


No comments:

Post a Comment