முகவுரை
கௌடில்யர் என்றும், விஷ்ணுகுப்தர் என்றும் அறியப்பட்ட சாணக்யர் (கி.மு.350-275), தட்சசீலப் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் ஆசாரியராகவும், பேரரசர் சந்த்ரகுப்த மௌரியரின் ப்ரதம மந்திரியாகவும் பணியாற்றி வந்தார். அவர், மிகவும் பழமையான, மிகவும் அறியப்பட்ட அரசியல் சிந்தனையாளர்கள், பொருளாதார நிபுணர்கள், மற்றும் அரசர்களை உருவாக்குபவர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.
இந்தியத் துணை கண்டத்தில் இருந்த எண்ணற்ற பேரரசுகளின் ஒருங்கிணைப்பு மூலம் முதல் இந்தியப் பேரரசு அமைய, மற்றும் கிரேக்கப் பேரரசர் அலெக்ஸாண்டருக்கு எதிராகச் சண்டையிட உத்வேகம் அளிக்கும் சக்தியாகவும் அவர் இருந்தார்.
கன்பியூசியஸ் மற்றும் மாச்சிவெல்லி போன்ற நன்கு அறியப்பட்ட உலகின் மற்ற சமூக மற்றும் அரசியல் தத்துவஞானிகளுடன் ஒப்பிடும்போது, சாணக்யா இந்தியாவுக்கு வெளியே ஒருவேளை குறைவாக அறியப்பட்டவராக இருக்கலாம். ஆனால் நிச்சயமாக இந்திய வரலாற்றில் முதல் உண்மையான அரசியல் கொள்கையாளராகக் கருதப்படுகிறார்.
அவரது தீர்க்கதரிசனம் மற்றும் அரசியலில் சூழ்நிலைக்கு ஏற்ற சமயோசிதம் இணைந்த தனது பரந்த அறிவு இந்தியாவில் வலிமைமிக்க மவுரிய பேரரசு அமைய உதவியது.
அரசியல் சிந்தனை மற்றும் சமூக ஒழுங்கிற்காக அவர் தனது அரசியல் கருத்துக்களைத் தொகுத்து வழங்கியுள்ள 'அர்த்தசாஸ்திரம்' என்ற நூல், உலகின் பழமையான ஆய்வுக்கட்டுரைகளுள் ஒன்றாகக் கருதப்பட்டுகிறது. அவரது கருத்துக்கள் இந்தியாவில் இந்த நாளும் பிரபலமாக உள்ளன.
பண்டித ஜவஹர்லால் நேரு, “டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்னும் தன்னுடைய நூலில், சாணக்யரை “இந்தியாவின் மாச்சிவெல்லி” என்று குறிப்பிட்டுள்ளார்.
சாணக்யரின் சூத்திரங்கள், கோட்பாடுகள் என்ற அடிப்படையில், மிகவும் தனித்துவம் கொண்டவை; ஒரு நிலையான அடிப்படையில் நல்ல முடிவு அடைவதற்கேற்ப, நடைமுறையில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டதாக நிரூபிக்கப்பட்டவை.
நமது வேலைப் பண்பாடு மற்றும் சமூக மேம்பாடு சிறப்பாக அமைய வேண்டுமெனில், இந்தக் கொள்கைகளை இன்றுகூட முயன்று பார்க்கலாம். அநேகமாக இவை வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், மற்றும் இந்தச் சமூகத்திற்கு சிறந்த பலனையளிக்கக்கூடும்.
முக்கியமான பின்குறிப்பு: பதினேழு அத்யாயங்கள் வாயிலாக தொகுத்துக் கொடுத்தவற்றைப் பற்றி முதல் அத்யாயத்தில், முதல் குறிப்பிலேயே சாணக்யர் இவ்வாறு தெளிவாகக் குறிப்பிடுகிறார்: ஸகல சக்திகளும் வாய்ந்த, மூவுலகங்களுக்கும் தலைவனான பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் பாதங்களைப் பணிந்து, பல்வேறு ஸாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு, ஒரு சிறந்த ராஜ்ய பரிபாலனத்திற்கான, நீதி ஸாஸ்திர சித்தாந்தங்களைக் கூறப்போகிறேன். அப்படியென்றால், பதினேழு அத்யாயங்கள் வாயிலாக தொகுத்துக் கொடுத்தவை அனைத்தும் அவருடைய சொந்தக் கருத்து அல்ல! அவருக்கும் முன்பாக வாழ்ந்த அறிஞர்கள் இயற்றியவற்றிலிருந்து அல்லது வேதங்களிலிருந்து அவை தொகுக்கப் பட்டிருக்கலாம். அடியேனும், அவர் தொகுத்ததாக எனக்குக் கிடைத்த ஹிந்தி நூல்களிலிருந்தும், திரு.விகாஸ் ஸூத் என்பவருடைய இணையதள வலைப்பதிவின் மூலமாகக் கிடைத்த ஆங்கில மொழியாக்கத்தைக் கொண்டு, என்னுடைய சிற்றறிவிற்கு எட்டியவரை தமிழில் மொழியாக்கம் செய்துள்ளேன். ஹிந்தி எழுத்துருவிலுள்ளதை எப்படி வாசிப்பது என்பதைக் காட்ட, உச்சரிப்பை அப்படியே ஆங்கிலத்திலும் தந்துள்ளேன். மொழி மாற்றம் மற்றும் மொழியாக்கத்தில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றை எனது vyshupjr@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தெரிவிக்குமாறு வாசக அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்நூலிலுள்ள பல விஷயங்களைப் படிக்கும்போது சில வாசகர்கள் மனதில் எதிர்ப்புணர்வு தோன்றலாம், அவை இந்தக் காலத்திற்குப் பொருந்தாததாகவும் தோன்றலாம். அதற்கு சாணக்யரோ அல்லது அடியேனோ பொறுப்பு அல்ல. ஏற்கெனவே மேற்குறிப்பிட்டவாறு, நமது வேலைப் பண்பாடு மற்றும் சமூக மேம்பாடு சிறப்பாக அமைய வேண்டுமெனில், இந்தக் கொள்கைகளை இன்றுகூட முயன்று பார்க்கலாம். அநேகமாக இவை வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், மற்றும் இந்தச் சமூகத்திற்கு சிறந்த பலனையளிக்கக்கூடும். அவ்வளவே!
Continued .... Part - 1 of Chanakya Neethi.
No comments:
Post a Comment